கிருஷ்ணகிரி, அக்.15: குப்பையில்லா கிருஷ்ணகிரி நகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி நகராட்சியின் 33 வார்டுகளில், மொத்தம் 223 தெருக்கள் உள்ளன. இதில், 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தினசரி 24 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, நகர பகுதியில் எங்கும் குப்பைகள் கொட்டி வைக்கும் இடம், குப்பை கிடங்கு இருக்கக்கூடாது. இதையடுத்து வரும் 31ம் தேதி முதல் கிருஷ்ணகிரி நகராட்சி, ‘குப்பை இல்லா நகர்’ மற்றும் ‘குப்பை கொட்டும் இடம் இல்லாத நகரமாக’ செயல்பட உள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
அதன்படி வீடுகளின் குப்பைகளில் சமையல், காய்கறி, பழக்கழிவுகளை பச்சை நிற தொட்டியிலும், பிளாஸ்டிக், காகிதம், துணி உள்ளிட்ட உலர் கழிவுகளை நீல நிற தொட்டியிலும், டயாபர், நாப்கின் போன்ற சுகாதார கழிவுகளை மஞ்சள் நிற தொட்டியிலும், பெயிண்ட், மருந்து, பழைய பேட்டரி உள்ளிட்ட சிறப்பு கவன கழிவுகளை, சிவப்பு நிற தொட்டி என குப்பைகள் மற்றும் கழிவுகளை நான்கு வகைகளாக பிரித்து குப்பை சேகரிப்போரிடம் வழங்க வேண்டும். குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்க கூடாது. கிருஷ்ணகிரி நகராட்சிக்கு, பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி, திடக்கழிவு மேலாண்மை திட்டம் நமது நகரத்தில் சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் மற்றும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


