Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குருபரப்பள்ளியில் வெறிநாய் கடித்து 7 பேர் படுகாயம்: மருத்துவமனையில் சிகிச்சை

கிருஷ்ணகிரி, அக்.14: கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளியில் வெறிநாய் கடித்ததில் 7 பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் குருபரப்பள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரு தினங்களில் வெறிநாய் ஒன்று திடீரென குருபரப்பள்ளி கிராமத்தில் சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி, துரத்தி கடித்துள்ளது.

இதில், குருபரப்பள்ளி வேணுகோபால் தெருவில் வசிக்கும் சரஸ்வதி, விபுஷணன், அரிச்சரண், ஞானவேல், தாண்டவன் உட்பட 7 பேரை நாய் கடித்துள்ளது. நாய் கடியில் பாதிக்கப்பட்டவர்கள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து, வேப்பனஹள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் சாவித்திரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், ஊராட்சி செயலாளர் முருகன், சுகாதாரத்துறை கடலரசு ஆகியோர் குருபரப்பள்ளியில் ஆய்வு செய்தனர். பின்னர், பொதுமக்கள் உதவியுடன் அந்த வெறிநாயை பிடித்து கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித்திரிகிறது. இருசக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள், நாய்கள் மீது மோதி கீழே விழுந்து படுகாயமடைந்து செல்கின்றனர். எனவே, நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, தடுப்பூசிகள் போட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.