Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கோடை மழை பொய்த்ததால் மானாவாரி மகசூல் பாதிப்பு

போச்சம்பள்ளி, ஜூலை 13: போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் கோடை மழையை நம்பி கேழ்வரகு, சாமை, சோளம், துவரை, நிலக்கடலை, எள் உள்ளிட்டவை பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு கோடை மழையை நம்பி, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கம்பு, சோம்பு, எள் உள்ளிட்ட மானாவாரி பயிர்களை சாகுபடி செய்தனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. ஆனால், போச்சம்பள்ளி பகுதியில் மட்டும் கோடை மழை தொடக்க காலத்தில் சரிவர பெய்யவில்லை. இதனால் கோடை மழையை நம்பி, சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்த நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் போதிய விளைச்சல் இன்றி பாதிக்கப்பட்டது. மகசூலும் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும், மே மாதத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்தனர். தென்மேற்கு பருவமழையும் இதுவரை கை கொடுக்காததால், மானாவாரியாக சிறுதானியம் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களை சாகுபடி செய்திருந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நிலக்கடலை செடிகள் முளைத்து, பூக்கள் பூக்கும் நிலையில் மழையின்றி காய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், ஆடி பட்டத்திற்காக மழையை நம்பி நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்ய காத்துள்ளனர்.

போச்சம்பள்ளி வாரச்சந்தையில், ஆடிப்பட்ட பயிர்கள் விதைப்புக்கு வியாபாரிகள் எள், சாமை, சோளம், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட விதைகளை எடுத்து, வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் மழை இல்லாததால், மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் சந்தையில் வியாபாரத்திற்கு எடுத்த வந்த கம்பு, சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பயிர் வகை விதைகள், விற்பனையாகாமல் தேங்கியது.