ராயக்கோட்டை, செப்.11: ராயக்கோட்டை நகரிலுள்ள மண்டிகளுக்கு, வரத்து குறைந்ததால் தக்காளி விலை அதிகரித்து, நேற்று கிரேடு ஒன்று ரூ.600க்கு விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தக்காளியை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைச்சலாகும் தக்காளியை தமிழகம் முழுவதும், புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். ராயக்கோட்டை மண்டிகளில், கடந்த மாதம் வரை 25 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி ரூ.300 வரை விற்பனையானது. இந்நிலையில் போதுமான மழையில்லாததால், ஏரிகளில் தண்ணீர் வற்றி நிலத்தடி நீர்மட்டம் தாழ்ந்து போனது. மேலும், கடும் வெயில் அடித்து வருவதால் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் குறைந்து போனது.
பயிர் சாகுபடிக்கு தேவையான நீர் இல்லாததால், காய்கறிகள், கீரை போன்றவை விற்பனைக்கு வரத்து வெகுவாக குறைந்து நாளுக்கு நாள் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தக்காளி விளைச்சலும் குறைந்துள்ளது. இதனால் ராயக்கோட்டை மண்டிகளுக்கு தக்காளி வரத்து குறைந்து, கடந்த சில நாட்களாக விலை அதிகரித்துள்ளது. நேற்று ராயக்கோட்டை மண்டியில் ஒரு கிரேடு தக்காளி ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையானது. வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக தக்காளியை கிலோ ரூ.20க்கு கொள்முதல் செய்கின்றனர்.


