கிடப்பில் போடப்பட்டுள்ள ஓசூர்-தளி ரயில்வே மேம்பால திட்ட பணியை மீண்டும் தொடங்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
ஓசூர், செப்.11: ஓசூர்-தளி சாலையில் உள்ள ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் தினமும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இப்பணிகளை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு குண்டூசி முதல் விமானத்திற்கு தேவையான உதிரி பாகங்கள் வரை தயாரிக்கப்படுகிறது. இதனால் ஓசூரில் லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயமும் அதிகளவில் மேற்ெகாள்ளப்படுகின்றன. இங்கு விளையும் காய்கறிகளை ஓசூர் மார்க்கெட்டிற்கு சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தினமும் எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர். ஓசூர்- தளி சாலையில் ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் தனியார் பள்ளிகள், குடியிருப்புகள் உள்ளன. ஓசூரிலிருந்து தளி செல்லும் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இதனையொட்டி உள்வட்ட சாலை செல்கிறது.
இந்த சாலை வழியாக கிருஷ்ணகிரியில் இருந்து வரும் வாகனங்கள் சீதாராம்மேட்டில் இருந்து, தளி சாலையையொட்டி இஎஸ்ஐ மருத்துவமனை வழியாக, கர்நாடகா மாநிலத்திற்கு செல்கிறது. ரயில் வரும்போது கேட் மூடப்பட்டால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது உள்ளது. அப்போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், தினமும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தடுக்க ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என ஓசூர் பகுதி மக்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த முறை கிருஷ்ணகிரி எம்பியாக இருந்த செல்லகுமார், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அடிக்கடி ஆய்வு செய்து வந்த நிலையில், செல்லகுமாரின் பதவி காலம் முடிந்த பிறகு, அதற்கு மேல் இந்த திட்டம் குறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `ஓசூர் சீதாராம் மேட்டில் இருந்து இஎஸ்ஐ மருத்துவமனை வரை செல்லும் உள்வட்ட சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் செல்கிறது. ஓசூர் - தளி சாலையில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. ரயில் வரும் போது கேட் மூடப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இங்கு பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வந்த நிலையில் முன்னாள் எம்பி அதற்கான நடவடிக்கை எடுத்தார். ஆனால், தற்போது இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்து பாலம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்,’ என்றனர்.


