கிருஷ்ணகிரி, அக்.10: கிருஷ்ணகிரி அருகே, பேக்கரி ஓனரை கத்தி முனையில் மிரட்டி ரூ.9,500 பறித்த 4 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். பர்கூர் அருகேயுள்ள ஒப்பதவாடி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (27). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள சேலம் பைபாஸ் சாலையில் பேக்கரி கடை வைத்துள்ளார். கடந்த 28ம் தேதி மாலை, அருண்குமார் கடையில் தனியாக இருந்த சமயத்தில் அங்கு வந்த 4 பேர் கும்பல், அருண்குமாரை கத்தியை காட்டி மிரட்டி, கல்லாவில் இருந்த ரூ.3,700 மற்றும் அருண்குமாரிடம் இருந்து ஜிபே மூலம் ரூ.5,800ஐ பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுபற்றி அருண்குமார் அளித்த புகாரின் பேரில், பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
மேலும், அவர்கள் ஜிபே மூலம் பணத்தை பரிமாற்றம் செய்து கொண்ட செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அருண்குமாரை தாக்கி பணம் பறித்தது கிருஷ்ணகிரி காந்தி நகரை சேர்ந்த அப்துல் ரகுமான்(27), பாரதி நகர் மணிகண்டன்(24), பழையபேட்டை கரண்(26), சின்ன அக்ரஹாரம் வடிவேல்(36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் நான்கு பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, 4 பேரையும் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.


