தேன்கனிக்கோட்டை, செப்.10: அஞ்செட்டி அருகே வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீர் தேடி வந்த 20 யானைகளை, பொதுமக்கள் போராடி விரட்டியடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதியில் ஏரி, குளங்கள் தண்ணீரின்றி வறண்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் தாழ்ந்ததால், விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் குறைந்து விட்டது.
பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகள் சாகுபடி செய்த எள், நிலக்கடலை, ராகி உள்ளிட்ட பயிர்கள் காய்ந்து கருகி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு வரத்தொடங்கி உள்ளன.
நேற்று காலை, அஞ்செட்டி அருகே உரிகம் பகுதியில், மல்லஹள்ளி கிராமத்தில் இருந்து குட்டிகளுடன் 20 யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்தன. இதை கண்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, கூச்சலிட்டபடி யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், அங்குமிங்கும் அலைந்த யானைகள், பின்னர் காட்டிற்குள் திரும்பிச்சென்றன.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘உரிகம் காட்டில் 100க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. தற்போது மழை பெய்யாததால் உணவு, தண்ணீர் கிடைக்காமல் யானைகள் கிராமத்தை நோக்கி வருகின்றன. மேலும், பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர்கள், காப்புக்காடுகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களை வாங்கி, யானைகளின் வழித்தடத்தை மறித்து பண்ணை வீடுகள் கட்டி வருகின்றனர். இதனால், யானைகள் வேறு வழியின்றி கிராமங்களுக்கு வருகின்றன. யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து பண்ணை வீடுகள் கட்டப்பட்டுள்ள இடங்களை, வனத்துறையினர் ஆய்வு செய்து கண்டறிந்து, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.


