போச்சம்பள்ளி, செப்.10: போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், நிலக்கடலை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், கடலை எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மானாவாரி பயிரான நிலக்கடலை 14 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பர்கூர், போச்சம்பள்ளி, மத்தூர், கல்லாவி, சாமல்பட்டி, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கடலை உற்பத்தி செய்யப்படுகிறது. நடப்பாண்டு பருவநிலை மாற்றங்களால் நிலக்கடலை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், போச்சம்பள்ளியை சேர்ந்த வியாபாரிகள் செங்கம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நிலக்கடலையை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
கடந்தாண்டு ஒரு மூட்டை நிலக்கடலை, ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3,500 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வெளிமாவட்டங்களில் ஒரு மூட்டை நிலக்கடலையை ரூ.4 ஆயிரம் முதல், ரூ.4,250 வரை விலை கொடுத்து வாங்கி வருகிறார்கள். இதனால் கடலை எண்ணெய் விலை கடந்த மாதம் ரூ.250 முதல் ரூ.280 வரை விற்பனையானது, தற்போது லிட்டருக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், `கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் விதைக்கப்பட்ட நிலக்கடலை செடிகள், போதிய மழையின்றி காய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலக்கடலை விதைகளை அதிக விலை கொடுத்து வாங்கி வந்து, பருவமழையை நம்பி விதைத்தோம். ஆனால் மழை ஏமாற்றி விட்டதால், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை செடிகள், வெயிலுக்கு காய்ந்து கருகி விட்டது. இதனால், நடப்பாண்டு நிலக்கடலை சாகுபடி அடியோடு பாதித்துள்ளது. இதற்கு மேல் மழை பெய்தாலும் எவ்வித பலனும் இல்லை,’ என்றனர்.


