Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பேரண்டப்பள்ளியில் பிரமாண்டமான பட்டர்பிளை மேம்பால பணி தீவிரம்

ஓசூர், செப்.10: ஓசூர் அருகே பேரண்டப்பள்ளியில் பிரமாண்டமாக பட்டர்பிளை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. 3 ஆறு வழிச்சாலைகள், 10 நான்கு வழிச்சாலைகள் கட்டமைத்து உள்ளதால், பெங்களூருவுக்கு இணை நகரமாக ஓசூர் மாறி வருகிறது. இதன் மூலம் ஓசூர் மட்டுமின்றி, பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சர்வதேச அளவில் வேகமாக வளர்ச்சி அடையும் நகரங்களில் 13வது இடத்தில் உள்ளது. ஓசூரில் 10 இருவழிச்சாலைகள், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. 3 ஆறு வழிச் சாலைகளுடன், எஸ்டிஆர்ஆர் சாலை என உள்கட்டமைப்பு வசதிகளில், நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக மாறி வருகிறது. ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடிக்கு பொருட்கள் உற்பத்தி மற்றும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இங்கு குண்டூசி முதல் விமான உதிரிபாகங்கள் வரை தயாரிக்கும் சுமார் 500க்கும் அதிகமான பெரிய தொழிற்சாலைகளும், 5 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு,குறு தொழிற்சாலைகளும் உள்ளன.

ஓசூர் மாநகரில் சுமார் 5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு அருகே உள்ளதால், நாள்தோறும் ஒரு லட்சம் மக்கள் இரு மாநில எல்லைகளை கடந்து தொழில் மற்றும் வேலை தொடர்பாக சென்று வருகின்றனர். தற்போது ஒசூரில் இருந்து எந்த திசையில் சென்றாலும், அவை நான்கு வழிச்சாலைகளாக உள்ளன. குறிப்பாக ஓசூரில் இருந்து தளி செல்லும் சாலை, அந்திவாடி முதல் டிவிஎஸ் செல்லும் கர்நாடக மாநில சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, ஓசூரை சுற்றி அமைக்கப்பட்டு வரும் செயற்கை கோள் நகர சுற்றுவட்ட சாலை (எஸ்டிஆர்ஆர்) கெலமங்கலம் சாலை, பாகலூர் சாலை, ஜீமங்கலம் முதல் கர்நாடக மாநிலம் செல்லும் கக்கனூர் சாலை, பாகலூர் முதல் பேரிகை சாலை, ஓசூர் உள்வட்ட சாலை உள்ளிட்ட 10 சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக கட்டமைத்துள்ளனர். இதனால் தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக, கன்டெய்னர் லாரிகள் மிகவும் எளிதாக சென்று வர முடிகிறது. 50 டன் டிப்பர் லாரிகள் கூட எந்தவித அசைவும் இல்லாமல் செல்லும் வகையில் சாலைகள் தரமாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

பல இடங்களில் மேம்பாலங்களை கட்டி, சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை, ஓசூர் முதல் கிருஷ்ணகிரி 6 வழிச்சாலையாக மத்திய அரசு ஏற்கனவே புதுப்பித்துள்ளது. இது தவிர, தர்மபுரி அத்திப்பள்ளிக்கு செல்லும் சாலை 6 வழிச்சாலையாகவும், கர்நாடக மாநிலம் பெங்களுரு ஓசூரை சுற்றி செயற்கைக்கோள் நகர சுற்றுவட்ட சாலையும் (சேட்டிலைட் டவுன் ரிங்ரோடு எஸ்டிஆர்ஆர்) அமைக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளன. ஓசூரை சுற்றி 20 கிமீ தொலைவிற்கு, எந்த திசையிலும் 4 வழிச்சாலை அல்லது 6 வழிச் சாலையில் செல்லும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னை முதல் தூத்துக்குடி வரை உள்ளவர்கள், கேரள மாநிலத்தில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் இனி ஓசூர், பெங்களூரு நகரங்களுக்குள் செல்லாமல் வட மாநிலங்களுக்கு எளிதாக செல்ல முடியும்.

குறிப்பாக ஓசூர் மற்றும் பெங்களூரு நகரங்களில், வாகனப் போக்குவரத்து நெரிசல் குறையும். தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் வாகனங்கள் விமான நிலையம் செல்ல, பேரண்டப்பள்ளியில் இருந்து வடக்கில் செல்லும் எஸ்டிஆர்ஆர் சாலையையும், மைசூர் செல்ல தெற்கில் செல்லும் எஸ்.டி.ஆர்.ஆர் சாலையை பயன்படுத்தி, ஓசூர் நகருக்குள் வராமல் செல்ல முடியும். அதே போல், பெங்களூரு நகர போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்கலாம். மேலும், ஓசூரில் உற்பத்தி செய்யப்படும் நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள், ஆப்பிள் ஐ போன், விமான உதிரிபாகங்கள், மருந்துகள், வாகன உதிரிபாகங்கள், ராணுவ தளவாடங்களை சென்னை விமான நிலையம் மற்றும் துறைமுகங்களுக்கு எளிதில் கொண்டு செல்ல முடியும். ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் பிரமாண்ட பட்டர்பிளை மேம்பாலம் கட்டுமான பணிகள் முடிந்தால், வாகன போக்குவரத்து நெரிசல் குறைந்து, தொழில் நகரம் மேலும் விரிவடையும் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.