கிருஷ்ணகிரி, ஆக.10: வேப்பனஹள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றின் கிளை நிதியான, மார்க்கண்டேய நதி மற்றும் குப்தா ஆற்றில் நீரின்றி வறண்டு காணப்படுவதால் 100 கிராமங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.கர்நாடக மாநில எல்லையான முத்தியால்மடுகு என்ற மலைப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறு, சிறு ஓடைகள் இணைந்து, மார்க்கண்டேயன் நதி உருவாகிறது. இந்த நதியில் வேப்பனஹள்ளி அருகேயுள்ள திம்மம்மா ஏரியில் இருந்து வரும் தண்ணீரும் கலக்கிறது. இதேபோல் குப்தா ஆறும் நீர் ஆதாரமாக உள்ளது.
நதி மற்றும் ஆறு பாலனப்பள்ளி, சிங்கரிப்பள்ளி, மாரசந்திரம், குருபரப்பள்ளி வழியாக சென்று, தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. இந்த நதியின் குறுக்கே, குப்பச்சிபாறை - மாரச்சந்திரம் இடையே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து மாரசந்திரம், ஜீனூர், கொரல்நத்தம், ஜிங்கலூர், வீரோஜிபள்ளி, நெடுமருதி, திப்பனப்பள்ளி, பண்டப்பள்ளி, கொத்தூர், தளவாப்பள்ளி, குந்தாரப்பள்ளி, சாமந்தமலை வழியாக கல்லுகுறி வந்து கிருஷ்ணகிரி படேதலாவ் ஏரியை (பெரிய ஏரி) வந்தடைகிறது.



