Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மாவட்டத்தில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நஷ்டம்

கிருஷ்ணகிரி, அக்.9: வெற்றிப்பயணம் திட்டம் மூலம், கிருஷ்ணகிரி மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு புறநகர், நகர் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் வெற்றிப்பயணம் திட்டம் துவங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட கட்டுப்பாட்டில் உள்ள டெப்போக்களில், 206 டவுன் பஸ்கள், 256 புறநகர் மற்றும் எல்.எஸ்.எஸ்., பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் ஏற்கனவே டவுன் பஸ்கள் மூலம் நாளொன்றுக்கு 2,964 சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, 256 புறநகர் பேருந்துகளில், 63 பஸ்களில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம். இதன் மூலம் 40 கி.மீ. மேற்பட்ட, 80 கி.மீ. வரை மகளிர் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம். இதன் மூலம், நாளொன்றுக்கு 581 சேவைகள் கூடுதலாக வழங்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை ஓசூர், தர்மபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் பணிக்கு செல்கின்றனர். இவர்கள் அனைவரும் வெற்றிப்பயணம் திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அதிகளவில் தனியார் நிறுவனங்கள் உள்ள நிலையில், அவற்றின் தூரமும் 60 கிலோ மீட்டருக்குள்ளாகவே வருகிறது. இதனால் பணிக்கு செல்லும் பெண்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கூட வெற்றிப்பயணம் திட்ட பஸ்களில் செல்வதால், தனியார் பஸ்களில் கூட்டம் குறைந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இது குறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மொத்தமுள்ள 90 தனியார் பஸ்களில், 10 பஸ்கள் டவுன் பஸ்களாகவும், 80 பஸ்கள் புறநகர் மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது அரசு புறநகர் பஸ்களில், பெண்கள் இலவசமாக செல்வதால் தனியார் பஸ்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. டவுன் பஸ்களில் மகளிர் பயணம் துவங்கப்பட்டபோதே ராயக்கோட்டை, வேப்பனஹள்ளி மார்க்கத்தில் செல்லும் தனியார் பஸ்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. தற்போது ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் செல்லும் பெரும்பாலான தனியார் பஸ்களும் நஷ்டத்தை சந்திக்கின்றன. நாளொன்றுக்கு 3,500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.

ஏற்கனவே, உதிரி பாகங்கள் விலை உயர்வு, ஊழியர்கள் ஊதிய உயர்வால் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நஷ்டம் மேலும் கவலையளிக்கிறது. இது குறித்து தமிழக அரசுக்கு மனு அளித்துள்ளோம். தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு பெட்ரோல், டீசல் மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வைத்துள்ளோம். இடைத்தேர்தலுக்கு பின் அழைத்து பேசுவதாக கூறியதால் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.