ஓசூர், செப்.9: ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட டைட்டன் டவுன்ஷிப் பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன், மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரில் டைட்டன் டவுன்ஷிப் உருவானதில் இருந்து, கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தங்கள் சொந்த செலவிலேயே சாலை, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வசதிகளை பராமரித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள மற்றொரு குடியிருப்பு பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக துளிர் நகர் பகுதிக்காக அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் அமைப்பு முழுமையடையாமல், டைட்டன் டவுன்ஷிப் பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. இதனால் கழிவுநீர் கால்வாயை இணைக்க வேண்டிய 20 மீ., இடைவெளியை விடுத்து, டைட்டன் டவுன்ஷிப் பிரதான சாலை வழியாக 150 மீ., தூரத்திற்கு கால்வாய் அமைக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து டைட்டன் டவுன்சிப் குடியிருப்பு வாசிகள் கூறுகையில், கடந்த 2006ம் ஆண்டே அப்போதைய சப் கலெக்டரால் 12 அடி மாட்டுவண்டி பாதை என உறுதி செய்யப்பட்ட சாலையை விடுத்து, அதனை ‘பட்டா இடம்’ என தற்போதைய மாநகராட்சி கமிஷனர் கூறி வருகிறார். டைட்டன் டவுன்ஷிப் சாலை மாநகராட்சிக்கு தானமாக வழங்கப்பட்டு இருந்தாலும், பாதையாக பயன்பாடுத்த இடையூறு செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த 2026 மார்ச் 30ம் தேதி வந்த நீதிமன்ற உத்தரவின் படியும், சமீபத்திய வழக்கு விசாரணையின் படியும், பட்டா இடம் என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவும், அதுவரை பணிகளை நிறுத்தவும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் நீதிமன்ற அறிவுறுத்தல் கடிதத்தை பொதுமக்கள் அளித்த மறுநாளே, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 300க்கும் மேற்பட்ட காவல் துறையினருடன் மாநகராட்சி அதிகாரிகள், சாக்கடை கால்வாய் கட்டுமான பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றனர்.
தொடர்ந்து சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை தடுத்தனர். ஆனால் போலீசார் பாதுகாப்புடன் பொதுமக்களை கைது செய்வதாக மிரட்டியதோடு, பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர். இதில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை குழாய்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக ஒட்டுமொத்த டைட்டன் டவுன்ஷிப் பகுதியிலும் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்று வழிகளான 12 அடி மாட்டுவண்டி பாதை அல்லது காம்பவுண்ட் சுவருக்கு பின்னால் உள்ள 1.5 அடி இடம் ஆகியவற்றை சுட்டிக்காட்டியும், அவ்வழியாக சாக்கடை கால்வாய் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ள வில்லை மாநகராட்சியின் இந்த செயல்பாடுகளை கண்டித்து டைட்டன் டவுன்ஷிப்பில் வசிக்கும் மக்கள், தங்கள் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து அடுத்தக்கட்ட சட்ட போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.


