கிருஷ்ணகிரி, செப்.9: வெளிமாநிலங்களுக்கு தடையை மீறி கல், உபபொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், தொடர்புடைய குவாரி, கிரஷர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கல்குவாரி, கிரானைட் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது: மாவட்டத்தில் மொத்தம் 6,139 வாகனங்கள் கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களாக பதிவாகி உள்ளது. இதில் இதுநாள் வரை 356 வாகனங்களில் மட்டுமே ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு எம்ஐஎம்ஏஎல் - போர்டலில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள வாகனங்களில் வருகிற 30ம் தேதிக்குள் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் கட்டாயம் ஜிபிஎஸ் கருவியை பொருத்த வேண்டும்.
மேலும், வெளி மாநிலங்களுக்கு சாதாரண கல் மற்றும் அதன் உபபொருட்கள் கொண்டு செல்ல, தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி மேற்கண்ட கனிமங்கள் கொண்டு செல்லப்படும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் கைப்பற்றப்படும். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களில், கனிமங்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என கண்டறிந்து, அந்த குவாரி மற்றும் கிரஷர்கள் மீது விதிகளின்படி கடும் நடவடிக்கை மேற்கொண்டு, உரிமம் ரத்து செய்யப்படும்.
மேலும், மாலை 6 மணிக்கு மேல் குவாரி பணிகள் மேற்கொள்ளக் கூடாது. குவாரிகளில் ரிக்போர் ஆழ்துளை கருவிகள் கொண்டு பாறைகளை துளையிடக் கூடாது. டிராக்டர் கம்பிரசர் பொருத்திய கைத் துளைப்பான்களை கொண்டு மட்டுமே பாறைகளை துளையிட்டு தகர்க்க வேண்டும். மேலும் குவாரி புலங்களை சுற்றிலும் டிஜிபிஎஸ் கற்கள் நடப்பட்டு குத்தகை காலம் முழுவதும் பராமரிக்கப்பட வேண்டும். குவாரி மற்றும் கிரஷர் வாயில்களில் உரிமம் தொடர்பான விவரங்கள் அடங்கிய பெயர் பலகைகள் வைத்து பராமரிக்கப்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் பன்னீர்செல்வம் மற்றும் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


