Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஓசூரில் விளைச்சல் அதிகரிப்பால் முட்டைகோஸ் விலை சரிந்தது: கிலோ ரூ.15க்கு விற்பதால் நஷ்டம்

ஓசூர், அக்.8: ஓசூர் பகுதியில், விளைச்சல் அதிகரிப்பால், முட்டைகோஸ்க்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். ேமலும் கிலோ ரூ.10 முதல் 15க் விற்பதால் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், தளி, கெலமங்கலம், சூளகிரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் குறுகிய காலத்தில் அறுவடைக்கு வரும் தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதிகளில் விளையும் காய்கறிகள் பத்தளப்பள்ளி காய்கறி மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சென்னை, கோவை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்தாண்டு இப்பகுதிகளில் விவசாயிகள் குறைந்தளவு முட்டைகோஸ் சாகுபடி செய்திருந்தனர். 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை முட்டைகோஸ் ரூ.2 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

இதனால், முட்டை கோசுக்கு நல்லவிலை கிடைக்கும் என எதிர்பார்ப்பரில் சாகுபடி பரப்பினை அதிகரித்தனர். தற்போது, முட்டைகோஸ் வரத்து அதிகரித்துள்ளதால், ஒரு மூட்டை முட்டைகோஸ் ரூ.700க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக ரூ.10 முதல் ரூ.15 வரையிலும் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. விலை சரிவால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்தாண்டு ஒரு மூட்டை கோஸ் ரூ.2 ஆயிரத்திற்கு விற்ற நிலையில், இந்தாண்டு ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் முட்டைகோஸ் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டது.

முட்டைகோஸ் நாற்று ஒன்று 90 பைசாவுக்கு வாங்கி பல ஏக்கரில் பயிரிட்டு சொட்டு நீர் பாசனம் மூலம் வளர்த்து, மருந்து தெளித்து பராமரித்து வந்தோம். அறுவடை தொடங்கி வரத்து அதிகரிப்பால், தற்போது ரூ.700க்கு விற்பனையாகிறது. ஓசூர் உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15க்கு விற்பனையாகிறது. இதனால், அறுவடை கூலி மற்றும் போக்குவரத்து, பராமரிப்பு செலவுக்கு கூட வருவாய் கிடைக்காமல் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பு ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் ஒரே பயிரை சாகுபடி செய்யாமல், லாபம் கிடைக்கும் வகையில் மாற்று பயிர் விவசாயம் செய்ய தோட்டக்கலைதுறையினர் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என்றார்.