பண்ணந்தூர் அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளின்றி மாணவர்கள் தவிப்பு சேதமான தண்ணீர் டேங்க், இடிந்த கழிவறைகளால் அவதி
போச்சம்பள்ளி, அக்.8: பண்ணந்தூர் அரசு பள்ளியில், சேதமான தண்ணீர் டேங்கால் மாணவர்களின் குடிநீர் தேவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சுவர் இல்லாததால் வெளிநபர்கள் உள்ளே புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்து பண்ணந்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில், 64 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் மூன்று ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கிராமப்புற மாணவர்களின் கல்வித்தேவையைப்பூர்த்தி செய்யும் இப்பள்ளியில், தற்போது போதிய அடிப்படை வசதிகள் இன்றி, பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி இல்லை. இதனால் மாணவர்கள், தங்கள் வீடுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், கழிவறைக்கு தண்ணீரும் முறையாக கிடைக்காததால் மாணவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இருக்கும் கழிவறைகளும் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. பள்ளியின் சுற்றுச்சுவர், சுமார் 30 அடி தூரத்திற்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே இடிந்து விழுந்தது.
ஆனால் இதுவரை சீரமைக்கப்படவில்லை. அதே போல், பள்ளி வளாகம் திறந்த வெளியாக காணப்படுவதால், மாலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் சமூக விரோதிகள் எளிதாக உள்ளே புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. அவர்கள் மது அருந்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள கிணறு எவ்வித பாதுகாப்பின்றி திறந்தவெளியில் உள்ளது. அதே போல், காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டிய பழமையான உயர்மட்ட தண்ணீர் தொட்டி, தற்போது சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே, பள்ளியில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்து, மாணவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என பெற்றோர் மற்றும் மாணவர்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ஆபத்தான நிலையில் உள்ள பழைய உயர்மட்ட தண்ணீர் தொட்டியை உடனடியாக இடித்து அகற்றி, அதற்கு பதிலாக புதிய தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டும். சேதமடைந்துள்ள பழைய கழிவறைகளை அப்புறப்படுத்தி மாணவ, மாணவிகளுக்கு போதுமான புதிய கழிவறைகளை கட்டித்தர வேண்டும். இடிந்து கிடக்கும் சுற்றுச்சுவரையும் புதியதாக கட்டி தரவேண்டும். இதனை மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


