தேன்கனிக்கோட்டை, செப்.8: தேன்கனிக்கோட்டை பகுதியில், மழையின்றி வறட்சியால் கருகிய பயிர்களை ஏர் உழுது விவசாயிகள் அழித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு, நடப்பாண்டு கோடை முடிந்த பிறகும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பருவமழை சரிவர பெய்யாததால், மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நீரின்றி முற்றிலும் வறண்டு காணப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோடு, கால்நடைகளுக்கு தேவையான நீர் மற்றும் தீவனம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழையில்லாத நிலையில், நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 80 சதவீதம் ராகி, சாமை, நிலக்கடலை, மொச்சை மற்றும் சோளம் உள்ளிட்ட மானாவாரி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். வழக்கம்போல் பருவமழை கைகொடுக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன், கடன்களை வாங்கியும், நகைகளை அடகு வைத்தும், விதைகள் மற்றும் உரங்களை வாங்கி விதைப்புப் பணிகளை மேற்கொண்டனர். ஆனால், நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக பொய்த்துப்போனது. மேலும் கடுமையான வெயிலின் தாக்கத்தால் பயிர்கள் அனைத்தும் வளர்ச்சி குன்றி, நிலத்திலேயே வாடியது. ஒரு சில விவசாயிகள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர். ஆனால், வசதி இல்லாத விவசாயிகள், கருகிய பயிர்களை நிலத்தில் அப்படியே விட்டால் நிலத்தின் தரம் பாழாகும் என்பதால், வேதனையுடன் டிராக்டர் மற்றும் ஏர் உழவு கொண்டு வாடிய பயிர்களை அழித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தேன்கனிக்கோட்டை பகுதி விவசாயிகள் கூறுகையில், `தேன்கன்கனிக்கோட்டை, அஞ்செட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் 80 சதவீதம் வானம் பார்த்த பூமியாக உள்ளதால், ஆண்டுதோறும் பருவமழையை எதிர்பார்த்து இருமுறை மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்வோம். இந்தாண்டு தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து, ராகி, நிலக்கடலை போன்ற மானாவாரி பயிர்களை பயிரிட்டோம். ஆரம்பத்தில், பரவலாக மழை பெய்தது. இதனால் நாற்று ஓரளவுக்கு வளர்ந்தன.
அதன்பிறகு முற்றிலும் மழை பெய்யாமல் பொய்த்து விட்டது. இதுதவிர, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, பயிர்கள் தண்ணீரியின்றி வாடி கருகி வருகிறது. இதனால் ஏர் உழுது, பயிர்களை அழித்து வருகிறோம். அடுத்த மழை பெய்தால், மீண்டும் விதைக்க உள்ளோம். வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,’
என்றனர்.


