கிருஷ்ணகிரி, செப்.7: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி அணையில் இருந்து சின்னாறு அணை, மாரசந்திரம் தடுப்பணை வழியாக, படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துளளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சின்னாறு அணை கடந்த 1984ம் ஆண்டு ரூ.95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இந்த அணையின் மொத்த உயரம் 32.80 அடியாகும். இந்த அணையானது சூளகிரி பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தின் ஆதாரமாக விளங்குகிறது. மேலும், பேரிகை மற்றும் அத்திமுகம், செட்டிப்பள்ளி, காருபல்லா, கட்டிகானப்பள்ளி, பீலாளம் உட்பட சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்யும்போது, காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, சின்னாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும். இதே போல், சூளகிரி அருகே உள்ள துரை ஏரி நிரம்பினாலும், சின்னாறு அணைக்கு உபரிநீர் வந்து சேரும். இந்த கால்வாய்களில் நீர் கடத்தும் திறனை அதிகரிக்க வேண்டும்.
கெலவரப்பள்ளி அணையில் இருந்து சின்னாறு அணைக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், `சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில், போதிய மழை பொழிவு இல்லாததால், சின்னாறு அணையின் மொத்த உயரமான 32.80 அடியில், தற்போது நீர்மட்டம் 17.65 அடியாக உள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக, நீர்மட்டம் படிபடியாக குறைந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் கெலவரப்பள்ளி அணையில் இருந்து, மருதாண்டப்பள்ளி ஏரி, துரை ஏரி வழியாக சின்னாறு அணைக்கு தண்ணீர் விட்டால் பயனுள்ளதாக இருக்கும்.
இதற்காக கால்வாய் அகலப்படுத்த வேண்டும். அதேபோல், சின்னாறு அணைக்கு நீர் வழங்க, அரசிதழில் வெளியிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். மேலும், சின்னாறு அணையில் இருந்து வேப்பனஹள்ளி ஒன்றியம் மாரசந்திரம் தடுப்பணைக்கும், அங்கிருந்து கிருஷ்ணகிரி அருகே உள்ள படேதலாவ் ஏரிக்கும் நீர் கொண்டு வர திட்டம் தீட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாரிடம் கேட்ட போது அவர் கூறுகையில், `கொடியாளம் அணைக்கட்டு பகுதியில், ஒரு நாளைக்கு 100 கனஅடி தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, சூளகிரி பகுதியில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரை நிரப்பி, விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் கருத்துரு தயார் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், சூளகிரி பகுதியில் உள்ள துரை ஏரி மற்றும் சின்னாறு அணைக்கு, தென்பெண்ணை ஆற்றிலிருந்து நீர்வரத்து கால்வாய் 98 கனஅடி தான் உள்ளது. இதனை மேலும் கூடுதலாக இக்கால்வாய்களில் நீர் செல்லும் வகையில், கால்வாய்களை அகலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சின்னாறு அணையிலிருந்து 8 கி.மீ., தூரம் உள்ள மாரசந்திரம் அணைக்கட்டு வழியாக, படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’ என்றார்.


