Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனப்பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும்

கிருஷ்ணகிரி, மே 7: வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க, கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் நீர் நிரப்ப, வனத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,501 சதுர கி.மீ., பரப்பளவுள்ள ஓசூர் வனக்கோட்டத்தில் 1,190 சதுர கி.மீ., பரப்பளவில் காவிரி வடக்கு மற்றும் தெற்கு வன உயிரின சரணாலயங்கள் அமைந்துள்ளன. அங்கு 468 வகையான தாவரங்கள், 36 வகையான பாலூட்டிகள், 272 வகையான பறவை இனங்கள், 172 வகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. அத்துடன் தேக்கு, ஈட்டி, சந்தனம், ஜாலாரி, உசில், ஆச்சான் மற்றும் பொரசமர வகைகளும், யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், புள்ளி மான்கள், கடமான், கரடிகள், மயில்கள், எறும்புத்தின்னிகள், அரியவகை விலங்குகளான சாம்பல் நிற அணில்கள், எகிப்திய கழுகுகளும் உள்ளன. குறிப்பாக காவிரி வடக்கு, தெற்கு வன உயிரின சரணாலயங்களில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் உள்ளன.

குறிப்பாக ஊடேதுர்க்கம், சானமாவு, நொகனூர், அய்யூர், ஜவளகிரி, உணிபண்டா, மகாராஜகடை, வேப்பனஹள்ளி, உடுபராணி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, உரிகம், தக்கட்டி, கெஸ்தூர், மல்லஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான யானைகளும் முகாமிட்டுள்ளன. ஓசூர் வனக்கோட்டமானது காவிரி, சின்னாறு, தென்பெண்ணையாறு மற்றும் தொட்டஹல்லா ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக உள்ளது. இந்த வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் மட்டுமின்றி, ஆண்டுதோறும் கர்நாடகா வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வரும் யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வனப்பகுதிகளில் பிரிந்து முகாமிட்டு, அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று பயிர்களை நாசம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன. சில நேரங்களில் மனிதர்களை தாக்குவதும், அதனால் உயிரிழப்பு ஏற்படுத்துவதும் தொடர் கதையாக உள்ளது.

வனப்பகுதியில் போதுமான தீவனம், தண்ணீர் கிடைக்காததால் அங்கிருந்து வெளியேறும் வனவிலங்குகள், வனத்தையொட்டி உள்ள கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. விவசாயிகள் சிலர் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த தோட்டத்தில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கின்றனர். மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது. அதே சமயம், யானைகள் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்றவற்றால் ஏற்படும் பயிர் மற்றும் மனித உயிர் இழப்புகளுக்கு வனத்துறை சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. தீவனம் மற்றும் தண்ணீரை தேடி யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்க வனத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஓசூர் சுற்றுவட்டார வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால், வன உயிரினங்கள் வனத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வரும் வன உயிரினங்களால் மனித உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, யானைகள் வனத்தை விட்டு வெளியேறுவதை தடுக்க வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் வனத்துறை சார்பில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.