ஓசூர், நவ.5: கர்நாடக மாநிலம் ஒசகோட்டாவில் இருந்து, பெரிய வெங்காயம் லோடு ஏற்றிய லாரி ஒன்று, நேற்று மதியம் ஓசூர் அருகே மூக்காண்டப்பள்ளியை தாண்டி, ஓசூருக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து கொண் டிருந்தது. தர்கா பகுதியில் லாரி வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரியில் இருந்த வெங்காய மூட்டைகள் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் விழுந்தது. இதில், மூட்டைகள் பிரிந்து பெரிய வெங்காயம் சிதறியது. இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், ஓடி வந்து சாலையில் சிதறிக் கிடந்த பெரிய வெங்காயங்களை பைகளில் நிரப்பி கொண்டு சென்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெரிய வெங்காயத்தை எடுத்துக்கொண்டு இருந்த பொதுமக்களை தடுத்தனர். பின்னர், விபத்தில் காயமடைந்த டிரைவர் சித்து (40) என்பவரை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு, சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர்செய்தனர்.


