Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நடப்பு கல்வியாண்டில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.54.67 கோடி கல்விக்கடன்

கிருஷ்ணகிரி, நவ.5: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் மாணவ, மாணவிகளுக்கு இதுநாள் வரை ரூ.54.67 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. ரூ.150 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாமை நடத்தின. இம்முகாமினை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்து, கல்லூரி மாணவ, மாணவிகள் 48 பேருக்கு, ரூ.2 கோடியே 67 லட்சம் கல்வி கடனுதவிகளை வழங்கினார்.

விழாவில், கலெக்டர் பேசியதாவது:

பொருளாதார கண்ணோட்டத்தில், கல்வி மற்றும் சுகாதாரத்தில் செய்யப்படும் முதலீடுகள் நேர்மறையான சமூக பலனை உருவாக்கக் கூடியவை. இது தனி நபருக்கு மட்டுமல்லாமல், முழு சமுதாயத்திற்கும் பன்மடங்கு பலனை தரும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, கல்விக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இன்று (நேற்று) மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து கல்விக்கடன் முகாம் நடத்தப்பட்டது.

இம்முகாமில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகளில் 48 பேருக்கு, ரூ.2 கோடியே 67 லட்சம் கல்விக் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில், மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.50 கோடி இலக்கை தாண்டி, இதுவரை ரூ.52 கோடி கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில், கடந்தாண்டு ரூ.50 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.102 கோடி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து, இந்தாண்டு மாணவர்களின் கல்வித்தேவைக்காக குறைந்தபட்சம் ரூ.150 கோடி அளவிற்கு கல்விக்கடன் வழங்கி புதிய சாதனை படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட மாவட்ட நிர்வாகமும், வங்கிகளும் இணைந்து முழுவீச்சில் செயல்பட வேண்டும். பொருளாதார ரீதியான தயக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, பிள்ளைகளின் உயர்கல்விக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும். வெறும் 7.3 சதவீதம் என்ற குறைந்த வட்டி விகிதத்தில் கல்விக்கடன்கள் வழங்கப்படுகின்றன.

மேலும், படிப்பு முடிந்த ஓராண்டு வரை கடனை திருப்பி செலுத்த வேண்டியதில்லை என்பதால், நிதிச் சுமையை காரணம் காட்டி, குழந்தைகளின் கல்விக்கு தடை ஏற்படுத்தாமல், அவர்களின் விருப்பப்படி படிக்க வைக்க வேண்டும். மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்போடு நின்று விடாமல், முதுகலை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தலைசிறந்த பல்கலைக் கழகங்களுக்கு சென்று, ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வியை தொடர வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மஞ்சுளா, வங்கிகளின் நிர்வாகிகள் சவுந்தரி, சசிகுமார், பெரியசாமி, ஹர்சா ரெட்டி, கோபிநாத், ஓம்பிரகாஷ்சிங், பர்கூர் அரசினர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் திருநாவுக்கரசு, தாசில்தார் சக்தி மற்றும் வங்கி மேலாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.