Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாத 14 கடைகளுக்கு சீல்

கிருஷ்ணகிரி, ஆக.5: கிருஷ்ணகிரி நகராட்சியில் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்த, 14 கடைகளுக்கு, நகராட்சி கமிஷனர் சேகர் தலைமையிலான அலுவலர்கள் ‘சீல்’ வைத்தனர். கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தமுள்ள, 33 வார்டுகளில் பல்வேறு இடங்களில் வணிகவளாக கடைகள், மார்கெட்டுகள், சந்தைகள் உள்ளிட்டவற்றில் வரியில்லா இனங்களான மாத, ஆண்டு வாடகை, இதர வரிகள், வசூல் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக, நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாத நகராட்சிக்குட்பட்ட, 14 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சேகர் நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி நகராட்சியில் நீண்ட காலமாக, வரியில்லா இனங்களான கடை வாடகை, செலுத்தாமல் பலர் உள்ளனர். அவர்களுக்கு முறைப்படி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை செலுத்தவில்லை.

இதையடுத்து கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், மட்டன் மார்கெட், தக்காளி மார்கெட், லண்டன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாத, 14 கடைகளை மூடி ‘சீல்’ வைத்துள்ளோம். மொத்தமாக உள்ள கடை வாடகை நிலுவையான, ரூ.7.56 கோடியில், நடப்பாண்டில் ரூ.1.40 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. ரூ.6.16 கோடி நிலுவை உள்ளது. அதேபோல், சொத்துவரியாக ரூ.6.41 கோடியும், குடிநீர் வரியாக ரூ.3.89 கோடியும், காலியிட மனைவரி ரூ.16.75 லட்சம், தொழில் வரி ரூ.1.12 கோடி, பாதாள சாக்கடை வரி ரூ.2.78 கோடி நிலுவைத்தொகையாக உள்ளது. நடப்பாண்டில் நிலுவையாக உள்ள வரிகள் மற்றும் வாடகை தொகைகளை வருகிற, செப்டம்பர் மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். மேலும் பாதாள சாக்கடைகள் நிலுவைத்தொகை செலுத்தாதவர்களின் வீடுகள், கடைகளின் இணைப்புகள் துண்டிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியின் போது, நகராட்சி மேலாளர் தமிழரசு, ஆர்.ஐ.,க்கள் சிவக்குமார், காயத்ரி மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.