ஓசூர், ஆக. 5: ஓசூர் அருகே யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில், ஜவுளிகிர வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதை போல, சானமாவு, ராயக்கோட்டை உள்ளிட்ட வன எல்லைப் பகுதிகளிலும் இரும்பு ரோப் வேலி அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த ஜவுளகிரி வனச்சரகப் பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்த நிலையில், யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஜவுளகிரி வனப்பகுதியில், ஜீரோ பாயிண்ட் வரை இரும்பு ரோப் வேலி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஜவுளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதுடன், மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையிடம் மனுக்கள் அளிக்கப்பட்டு, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இந்நிலையில், விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, தமிழக அரசின் ஒப்புதலுடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து, ஜவுளகிரி வனப்பகுதியில் ஜீரோ பாயிண்ட் வரை இரும்பு ரோப் வேலி அமைக்கும் பணியை நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் கர்நாடக வனப்பகுதியில் இருந்து வரும் காட்டு யானைகள், விவசாய நிலங்களுக்குள் நுழைவது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதே போலவே, தொடர்ந்து காட்டு யானைகளால் பாதிப்புக்குள்ளாகி வரும் சானாமாவு ராயக்கோட்டை, தும்ஜேப்பள்ளி விவசாயிகள், பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதிகளிலும் இரும்பு ரோப் வேலி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் தற்போது கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.


