போச்சம்பள்ளி, நவ.4: மத்தூர் அருகே 8ம் வகுப்பு பயிலும் 13 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள பள்ளியில் 13 வயது சிறுவன் 8ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவனுக்கும், அதேபகுதியை சேர்ந்த அருண்(30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அருண் அங்குள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த அருண், நாளடைவில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தொடர்ந்து, எல்லை மீறல் அதிகரித்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன், பள்ளியில் தனது சக நண்பர்களிடம் அருணின் நடவடிக்கை குறித்து தெரிவித்து உள்ளான்.
இதுகுறித்து மாணவனின் நண்பர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதிர்ச்சியடைந்த பள்ளி தலைமை ஆசிரியர், இதுகுறித்து குழந்தைகள் நலக்குழு அலுவலர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, குழந்தைகள் நலக்குழுவினர், மாணவனிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், விசாரணை குறித்த அறிக்கை மற்றும் தகவல்களை மத்தூர் காவல் நிலையத்தில் வழங்கி புகார் தெரிவித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், அருணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நீண்ட நாட்களாக 13 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


