கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,005 முதல் 1,010 பெண் குழந்தைகள் என்ற அளவில் பாலின விகிதம் உயர்ந்துள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெண் குழந்தைகளை காப்போம்- பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில், பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, சுமார் 850 முதல் 870 பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்து வந்த நிலை இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்த பெண் சிசு கொலை மற்றும் பாலின தேர்வு கருக்கலைப்புக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. இதில், ஈடுபட்ட நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,005 முதல் 1,010 பெண் குழந்தைகள் என்ற அளவில் பாலின விகிதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், மாநிலத்திலேயே அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டங்களில் ஒன்றாக சாதனை படைத்துள்ளது. மேலும், குடும்ப சூழல் காரணமாக படிப்பை நிறுத்த வற்புறுத்தப்படும் அல்லது குழந்தை திருமண அபாயத்தை எதிர் கொள்ளும் மாணவிகள், உடனடியாக தங்கள் பள்ளி தலைமையாசிரியர் அல்லது ஆசிரியர்களை அணுக வேண்டும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய பாதுகாப்பு வழங்கும். ஏற்கனவே இதுபோன்ற இடர்பாடுகளுக்கு உள்ளான, 10க்கும் மேற்பட்ட மாணவிகளை, மாவட்ட நிர்வாகம் மீட்டு, அரசு விடுதிகளில் தங்க வைத்து அவர்களின் விருப்பப்படி உயர்கல்வி பயில ஏற்பாடு செய்துள்ளது. அவர்களில் சிலர் தற்போது சட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தவிடாமல் தடுக்கும் மிகப்பெரிய சவாலாக ஸ்மார்ட்போன் மற்றும் டிஜிட்டல் அடிமைத்தனம் உருவாகியுள்ளது. இதனை தவிர்க்க மாணவிகளுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. மேலும், உயர்கல்விக்கான கல்லூரி கட்டணங்களை ஈடுகட்ட, இம்மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.50 கோடி மதிப்பில் வங்கிகள் மூலம் கல்விக்கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் வழிகாட்டுதலுக்கு உயர்வுக்கு படி திட்டம், தனித்திறன் பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் எளிதாக பயில மணற்கேணி செயலி போன்றவை பயன்பாட்டில் உள்ளன. எனவே, மாணவிகள் எவ்வித தயக்கமுமின்றி தங்கள் குறைகள் மற்றும் தேவைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து, தமிழக அரசு வழங்கி வரும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
தொடர்ந்து கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கேடயங்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு குழந்தைகள் உதவி எண் 1098, பெண்கள் உதவி எண் 181 அடங்கிய நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்களை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில், உதவி ஆணையர் (ஆயம்) பழனி, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.ஜெகநாதன், மாவட்ட கல்வி அலுவலர் கவுசர், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.இனியாள் மண்டோதரி, தாசில்தார் ராஜலட்சுமி, எஸ்ஐ (சைபர் க்ரைம்) கார்த்திகா, குழந்தைகள் நலக்குழும தலைவர் பிரசன்ன குமாரி, மாவட்ட மகளிர் அதிகார மைய ஒருங்கிணைப்பாளர் ராகவி, பள்ளி தலைமை ஆசிரியை மேரி ஷெர்லின் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


