ஓசூர், நவ.4: ஓசூர் நகரில் ஒதுக்குப்புறமான குடியிருப்பு பகுதியில் நள்ளிரவு முகமூடி கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வலம் வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள்தொகை பெருக்கத்தால், அதிக அளவில் குடியிருப்புகள் உருவாகி வருகிறது. புதிது புதிதாக உருவாகி வரும் இந்த குடியிருப்பு பகுதிகளில் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்ற, இரவு நேரங்களில் மர்ம நபர்கள் அவ்வப்போது நுழைந்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது அதிகரித்துள்ளது.
பல வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவாகி கொள்ளையர்கள் குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஓசூர் -தளி சாலையில் உள்ள கர்னூர் பகுதியில் உள்ள சாந்தி நிகேதன் லேஅவுட் மற்றும் மஞ்சுநாதா லே-அவுட் ஆகிய இரண்டு குடியிருப்பு பகுதிகளில், முகமூடி அணிந்தவாறு 3 மர்ம நபர்கள் நள்ளிரவில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தனர். வீடுகளுக்குள் ஆட்கள் இருக்கிறார்களா என நோட்டமிட்டவர்கள், ஆட்கள் இல்லாத வீடுகளை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயற்சிகளை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டின் காம்பவுண்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அந்த வீட்டில் ஆட்கள் இல்லை என நினைத்து வீட்டின் முன்பக்க கதவை ஆயுதத்தால் உடைத்துள்ளனர்.
அதே நேரத்தில் சப்தம் கேட்டு, வீட்டினுள் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள், விழித்து எழுந்து லைட் போட்டதால் அதிர்ச்சி அடைந்த மர்ம நபர்கள், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதனால், குடியிருப்புவாசிகள் சுதாரித்துக் கொண்டனர். மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக அறிந்த பொதுமக்கள், அப்பகுதியில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த போது, அதில் 3 மர்ம நபர்கள் முகமூடி அணிந்துகொண்டு, உடலில் துணிகளை போர்த்தியபடி, ஒன்றரை மணி நேரம் சுற்றித் திரிந்தது தெரிய வந்தது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.


