போச்சம்பள்ளி, நவ.3: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், கடலை எண்ணெய் விலை உயர்ந்து லிட்டர் ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், இனிப்பு வகைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தீபாவளி கொண்டாட்டத்தின் போது, கிராமப்புறங்களில் அதிரசம் முக்கிய இடம் பெறும். அரிசியை ஊற வைத்து, உரலில் இடித்து குண்டுவெல்லம் கலந்து, பதமாக எடுத்து அதை எண்ணெயில் போட்டு தயார் செய்கின்றனர். பின்னர், கோயில்களுக்கு எடுத்து சென்று சுவாமிக்கு படையலிட்டு தரிசனம் செய்து, விரதம் முடிப்பது வழக்கம்.
இந்நிலையில், போச்சம்பள்ளி பகுதிகளில், கடலை எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு லிட்டர் கடலை எண்ணெய் ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால், இல்லதரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து செக்கு எண்ணெய் தயாரிப்பாளர் வீரமலை இளங்கோ கூறுகையில், `கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்திருந்தனர். ஆனால், மழை சரிவர பெய்யாததால், நிலக்கடலை செடிகள் காய்ந்து கருகி விட்டன. இதனால் நிலக்கடலை விளைச்சல் குறைந்து, எண்ணெய் விலை உயர்ந்துள்ளது,’ என்றார்.


