Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இறைச்சி கழிவுகளை கொட்டும் இடமான பாப்பாரப்பட்டி ஏரி; கழிவுநீர் கலப்பதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி, நவ.3: கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி ஏரி மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் இறைச்சி கழிவுகள், கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டில், பாப்பாரப்பட்டி ஏரி அமைந்துள்ளது. மழைக்காலங்களில் கிருஷ்ணகிரி சையத்பாஷா மலையில் இருந்து வரும் நீர், படேதலாவ் ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீர் இந்த ஏரிக்கு வருகிறது. மேலும், கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் பழையபேட்டை பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கலந்து இந்த ஏரிக்கு வருவதால், ஆண்டு முழுவதும் இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி காணப்படும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்த ஏரியின் தண்ணீரை கொண்டு, சுமார் 50 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில், ஏரியை சுற்றி கட்டிய கட்டிடங்கள், வீடுகள் மற்றும் அப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுகள், நேரடியாக ஏரிக்கு திருப்பி விடப்பட்டன.

இதே போல், பழையபேட்டையில் இருந்து வரும் கழிவு நீரும், நேரடியாக ஏரியில் கலந்து வருகிறது. இதனால் ஏரி நீர் மாசடைந்து, விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், ஏரி கீழ் பகுதியில் விவசாயம் கைவிடப்பட்டு, நிலம் தரிசாக மாறியுள்ளது. அத்துடன் அந்த பகுதியில் இருந்த விவசாய நிலங்கள் அனைத்தும், பிளாட் போட்டு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஏரிக்கு நீர்வரத்து கால்வாய்களும், ஏரியில் இருந்து வெளியேறும் உபரி கால்வாயும், கழிவுநீர் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படும் இடமாக மாறி உள்ளது. தற்போது, பரவலாக பெய்த மழையால், பாப்பாரப்பட்டி ஏரி நிரம்பி, உபரிநீர் கால்வாய் வழியாக அவதானப்பட்டி ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், `மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான படேதலாவ் ஏரியில் இருந்து, பாப்பாரப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வரும் நீர்வரத்து கால்வாய், பழையபேட்டையில் இருந்து நீர்வரத்து கால்வாய் மற்றும் பாப்பாரப்பட்டி ஏரியில் இருந்து அவதானப்பட்டி ஏரிக்கு செல்லும் கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த கால்வாய் போதிய பராமரிப்பு இல்லாததால், குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு, கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரிக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. ஏரியில் கழிவுநீர் கலப்பதால், நிலத்தடி நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசுவதோடு, விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்து, ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’

என்றனர்.