Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ரூ.233.34 கோடியில் நடைபெற்று வரும் எண்ணேகொள் கால்வாய் திட்ட பணியை விரைந்து முடிக்க வேண்டும்: விவசாயிகள் வேண்டுகோள்

கிருஷ்ணகிரி, ஜூலை 3: ரூ.233.34 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் எண்ணேகொள் அணை கால்வாய் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணேகொள் அணைக்கட்டில் இருந்து வலது மற்றும் இடது புறத்தில் இருந்து, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளக்காலங்களில் வரும் உபரிநீரை, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு, நீர் வழங்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக பிரதான கால்வாய்கள் மற்றும் கிளை கால்வாய்கள் அமைக்கும் பணி, ரூ.233.34 கோடி மதிப்பில் 73.32 கி.மீ துரத்திற்கு கால்வாய் அமைக்கும் பணிகள் மற்றும் தொட்டிப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எண்ணேகொள் அணைக்கட்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கிருஷ்ணகிரி அணைக்கு மேல்பகுதியில் 16 கி.மீ தொலைவில் உள்ளது.

இந்த அணைக்கட்டின் வலது புறத்தில், சுமார் 50.65 கி.மீ தொலைவிற்கும், இடதுபுறத்தில் 22.67 கி.மீ தொலைவிற்கும் என மொத்தம் 73.32 கி.மீ தொலைவிற்கு பிரதான கால்வாய்கள் மற்றும் தொட்டிப்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு வலது புற கால்வாய்க்கு தேவையான 207.59 மில்லியன் கனஅடியும், இடதுபுற கால்வாய்க்கு தேவையான 161 மில்லியன் கனஅடியும் என மொத்தம் 368.59 மில்லியன் கனஅடி தண்ணீர் வழங்க ஏதுவாக கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. எண்ணேகொள் அணைக்கட்டின் வலதுபுற கால்வாய், பெல்லம்பள்ளி, கூளியம், செம்படமுத்தூர், அகரம், சோக்காடி, பெல்லாரம்பள்ளி, கத்தேரி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, பன்னிஅள்ளி மற்றும் கரடிஅள்ளி ஆகிய கிராமங்களின் வழியாக, தர்மபுரி மாவட்டம் தும்பலஅள்ளி அணையை சென்றடைகிறது.

இத்திட்டத்தில் வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் அமைக்கும் பணி, தற்போது சுமார் 60 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மொத்தம் 3,408 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இந்த திட்டம் செயல்படுத்தினால், 29,942.05 மெட்ரிக் டன் கூடுதல் உணவு உற்பத்தி செய்ய முடியும். இந்நிலையில், நீர்வளத்துறை பொறியாளர்கள் குருபரப்பள்ளி, போலுப்பள்ளி, பெல்லம்பள்ளி, அகரம் மற்றும் கத்தேரி பகுதிகளில் கடந்த ஆண்டு கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகளுடன் கலந்துரையாடினர். தற்போது சுமார் 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நில எடுப்பு பணிகளை விரைந்து முடித்து, இத்திட்டத்தினை உரிய நேரத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், மற்ற துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புடன் பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுரை வழங்கினர். ஆனால், இந்த திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், `எண்ணேகொள் கால்வாய் திட்டம் செயல்பாட்டிற்கு வருவதன் மூலம், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 33 ஏரிகள் மற்றும் ஒரு அணையின் பாசனப் பரப்பான 3,408 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். ஆனால் அதிகாரிகளின் மெத்தன போக்கால், பணிகள் நடைபெறுவது தாமதமாகிறது. எனவே, இப்பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.