Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விதிமீறலில் 4 மாதங்களில்; 140 வழக்குகள் பதிவு; 202 வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி, நவ.2: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கனிமங்கள் தொடர்பான விதிமீறல்களுக்காக 4 மாதங்களில் 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 202 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கூறியதாவது: தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, சாதாரண கற்களான ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பயன்பாட்டிற்கான கனிமப் பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை, மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக கனிமப் பொருட்கள் கடத்தி செல்லப்படுவதை தடுக்கவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தீவிரக் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை ஆகிய துறைகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம், கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நான்கு மாதங்களில் கனிமங்கள் தொடர்பான விதிமீறல்களுக்காக மொத்தம் 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 202 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த ஜூலை மாதம் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 வாகனங்களும், ஆகஸ்ட் மாதம் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 57 வாகனங்களும், செப்டம்பர் மாதம் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 60 வாகனங்களும், அக்டோபர் மாதம் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 49 வகானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு செல்லும் 29 எல்லையோரப் போக்குவரத்து வழித்தடங்களிலும், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக பிரதான சாலைகளை தவிர்த்து, சிறிய சாலைகள் மற்றும் மாற்று வழித்தடங்கள் வழியாக கனிமப் பொருட்கள் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்படுவதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கனிமப் பொருட்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு, அந்த கருவியை கனிம மேலாண்மை இணையதளத்துடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (1ம் தேதி) முதல் மேற்கண்ட தரத்திலான ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, இணையதளத்துடன் இணைக்கப்படாத வாகனங்களுக்கு கனிமப் போக்குவரத்து அனுமதிச் சீட்டு மற்றும் நடைச்சீட்டு வழங்கப்படாது. உரிய அனுமதிச் சீட்டு இல்லாமலோ அல்லது ஜிபிஎஸ் தொடர்பான விதிமுறைகளை மீறியோ கனிமப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கண்டறியப்பட்டால், சட்டப்படி பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாவட்ட எஸ்பி அலுவலகம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் அலுவலகம் ஆகிய இரண்டு அலுவலகங்களிலும் பிரத்தியேகக் கண்காணிப்பு கட்டுப்பாடடு அறைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் சட்டப்படி பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்மந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் இதற்கான பொறுப்பான பிற நபர்கள் மீது தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிகளின்படி, குற்றவியல் நடவடிக்கைகள் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோத கனிமச் சுரங்க நடவடிக்கைகள் மற்றும் கனிம கடத்தலுக்கு எவ்விதத்திலும் இடமளிக்கப்படாது. விதிமீறல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், எவ்வித பாரபட்சமுமின்றி கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள், குவாரி உரிமையாளர்கள், கனிம விற்பனையாளர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் அனைவரும் அரசின் உத்தரவுகளை முழுமையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.