Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாறை இடுக்கில் தவறி விழுந்த பள்ளி மாணவன்

கிருஷ்ணகிரி, மார்ச் 2: பர்கூர் அருகே மலை மீது ஏறிய போது, பாறை இடுக்கில் தவறி விழுந்த பள்ளி மாணவனை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மல்லப்பாடியில் 2,600 அடி உயர மலை உள்ளது. இதில் 600 அடி உயரத்தில், ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. பாதைகள் முறையாக இல்லாத போதும், அதில் உள்ள படிகள் வழியாக பாறைகளில் பக்தர்கள் சென்று ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 11 மணியளவில், அங்கிநாயனப்பள்ளி அடுத்த மேல்கொட்டாயைச் சேர்ந்த சற்குணன் என்பவரது மகன் திருப்பதி(13), சரவணன் என்பவரது மகன் இனியவன்(13) ஆகியோர், பள்ளி விடுமுறை என்பதால், ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றனர்.

பின்னர், இருவரும் மலை உச்சிக்கு செல்லலாம் என்ற ஆசையில், மலை மீது ஏறி உள்ளனர். மலை உச்சியை நெருங்கும் போது, திருப்பதி திடீரென கால் இடறி இரு பாறைகளுக்கு இடையில் விழுந்து சிக்கினான். அவரால் வெளியில் வரமுடியவில்லை. ஆள் நடமாட்டமில்லாத அப்பகுதியில், அவர்களது கூச்சலும் யாருக்கும் கேட்கவில்லை. இதையடுத்து, திருப்பதியை அங்கேயே விட்டு விட்டு, இனியவன் மலையிலிருந்து இறங்கி வந்து மலையடிவாரத்தில் உள்ளவர்களிடம் விபரத்தை கூறினான்.

உடனடியாக பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த பர்கூர் தீயணைப்பு வீரர்கள் ரமேஷ், பழனி, ராஜேஷ் சங்கர், அருண்குமார், அன்புமணி ஆகியோர் மலை மீது ஏறி, மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணி வரை 3 மணி நேரம் போராடி, கயிறு கட்டி பாறைகளுக்குள் இறங்கி சிறுவன் திருப்பதியை பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.