Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 22,658 மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை

கிருஷ்ணகிரி, மார்ச் 2: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், 55 கல்லூரிகளை சேர்ந்த 22,658 மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயின்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம், அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், பொறியியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட படிப்புகளை படிக்கும் மாணவர்கள் ஏராளமானோர் பயனடைகிறார்கள்.

மேலும், பிற மாநிலங்களில் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஐஐடி, என்ஐடி, ஐஐஎஸ்இஆர் போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பயனடைகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில், 55 கல்லூரிகளில் பயிலும் 6,270 மாணவர்களுக்கு தமிழப் புதல்வன் திட்டத்தின் கீழ், மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி, ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனம், ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி, போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லுரி, ஓசூர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட 55 கல்லூரிகளில் பயிலும் 22,658 மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், ரூ.1000 உதவித்தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக்கவும், பொருளாதார வசதிக் குறைவு உட்பட பல்வேறு காரணங்கால் பள்ளி படிப்பிற்குப் பின் உயர் கல்வியைத் தொடர முடியாத நிலையில் இருந்த மாணவர்களுக்கு உயர்கல்வி சேர உறுதுணையாகவும், கல்லூரி செல்லும் மாணவர்களின் உள்ளங்களில் தன்னம்பிக்கையையும், கற்கும் ஆர்வத்தையும் பெருக்கவும் உதவுகிறது. இத்திட்டத்தினால் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.