Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேஆர்பி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு 150 நாட்கள் தண்ணீர் திறக்க வாய்ப்பு

கிருஷ்ணகிரி, ஜூலை 1: கிருஷ்ணகிரி கேஆர்பி அணையிலிருந்து இம்மாதம் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின், முக்கிய நீர் ஆதாரங்களாக கே.ஆர்.பி அணை, ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை, ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணை, சூளகிரி அருகே உள்ள சின்னார் அணை மற்றும் பாரூர் பெரிய ஏரி ஆகியவை உள்ளன. தற்போது பெய்து வரும் மழையால், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் குறிப்பிடும்படி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், கடந்த காலங்களில் விவசாயத்தை விட்டு, வெளி மாநிலங்களுக்கு வேலை தேடி சென்றவர்கள் கூட, மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, கிருஷ்ணகிரி அணை நீரை கொண்டு ஏராளமான விவசாயிகள், விவசாயம் செய்து பயனடைந்து வருகின்றனர். கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து, ஆண்டுக்கு இரண்டு முறை பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி, முதல் போக பாசனத்திற்கு ஜூலை (இம்மாதம்) மாதத்திலும், இரண்டாம் போக சாகுபடிக்கு டிசம்பர் மாதத்திலும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு முதல் போக பாசனத்திற்கு இம்மாதம் தண்ணீர் திறக்க போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதாலும், தொடர்ந்து பெய்ய உள்ள மழையால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாலும், வழக்கம் போல் இம்மாதம் இறுதிக்குள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி, கிருஷ்ணகிரி அணையின் மொத்த உயரமான 52 அடியில், 49.80 அடி உயரத்திற்கு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணைக்கு 534 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசிற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் (நீர்வளம்) கருத்துரு அனுப்பி வைத்துள்ளனர். அதன் அடிப்படையில், தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் விஜய் உத்தரவிடுவார்.

தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதால், முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதில் எவ்வித சிரமமும் இருக்காது என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முதல்போக பாசனத்திற்கு 150 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இதன் மூலம், கிருஷ்ணகிரி தாலுகாவில் உள்ள பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பரஅள்ளி, பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9 ஆயிரத்து 12 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். இதுகுறித்து கேஆர்பி அணை பாசன விவசாயிகள் கூறுகையில், தற்போது அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதாலும், எதிர்வரும் மழையால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாலும், இவ்வாண்டு முதல்போக பாசனத்திற்கு தேவையான அளவிற்கு தண்ணீர் 150 நாட்களுக்கு திறந்துவிட வாய்ப்புள்ளது.

இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதன் மூலம் நெல் பயிரிடும் விவசாயிகள் மட்டுமின்றி, இந்த பகுதியில் உள்ள தென்னை, பூந்தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள் என பல்வேறு விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகளும் பயன்பெறுவார்கள். மேலும், அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால், தற்போதே விவசாயிகள் நிலங்களை சீர்படுத்தும் பணியினை தொடங்கியுள்ளனர். எனவே, இம்மாதம் முதல்போக பாசனத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.