பிரத்யேகமாக வடிவமைப்பு கூண்டு வைத்து காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினருக்கு பயிற்சி; விவசாயிகள் மகிழ்ச்சி!!
கிருஷ்ணகிரி, அக்.28: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதை விவசாய சங்கத்தினர் வரவேற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல், ராகி, கம்பு, நிலக்கடலை, குச்சிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெரும் இழப்பினை சந்தித்து வருகின்றனர். காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், மாவட்ட வனத்துறை அலுவலர் உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகளை பிடிக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கூண்டு தயார் செய்யப்பட்டு கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு காட்டுப்பன்றிகளை கூண்டு வைத்து பிடிப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் சீத்தாராமன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட வனச்சரக அலுவலர்கள் மூலம், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை பகுதியான காளிக்கோயில் அருகே உள்ள துரைஏரி பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு வரும் காட்டுப் பன்றிகளை பிடிக்க முதல் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் சீத்தாராமன் கூறுகையில், மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். ஆகையால் இந்த காட்டுப்பன்றிகளை கூண்டு வைத்து பிடிக்க மாவட்ட வனத்துறை அதிகாரியின் ஆலோசனைப்படி, காட்டுப்பன்றிகளை பிடிக்க முதல் முறையாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கூண்டு தயார் செய்யப்பட்டு காளிகோயில் அருகே உள்ள துரைஏரி பகுதியில் உள்ள விளைநிலத்தின் அருகில் அமைக்கப்பட்டு வனத்துறையினர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதில் காட்டுப்பன்றிகளை கவரும் வகையில் கூண்டிற்குள் நிலக்கடலை, கேரட், பீன்ஸ், மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு தானியங்கள் போடப்பட்டுள்ளது, என்றார்.இது குறித்து தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் கூறுகையில், காட்டுப்பன்றியால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தோம். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தற்போது வனத்துறையினர் கூண்டுகள் வைத்து காட்டுப்பன்றியை பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டு உள்ளனர். இந்த முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது, என்றார்.


