சென்னை: கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட இரங்கல் செய்தி: காங்கிரஸ் கட்சியில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து மிகச் சிறப்பாக செயல்பட்ட எஸ்.எம்.கிருஷ்ணா மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன்.
கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சியில் குறிப்பாக, தகவல் தொடர்புத்துறையில் மகத்தான சாதனைகளை புரிந்தவர். தொழில் வளர்ச்சியை பெருக்கியவர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் பெரும் பங்காற்றியவர். எஸ்.எம்.கிருஷ்ணா மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.


