கோயம்பேடு காய்கறி, பழம், பூ மார்க்கெட் வளாகத்தில் உள்ள கழிப்பிடங்களை இலவசமாக பயன்படுத்த உத்தரவு: வியாபாரிகள், பொதுமக்கள் அமைச்சருக்கு நன்றி
இதுசம்பந்தமாக வியாபாரிகள், அங்காடி நிர்வாக அலுவலர் இந்துமதியை சந்தித்து, கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் உள்ள அனைத்து கழிப்பிடங்களும் இலவசமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து காய்கறி, பூ பழம் ஆகிய மார்க்கெட்டில் உள்ள அனைத்து கழிப்பிடங்களும் இலவசமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அங்காடி நிர்வாக அலுவலர் இந்துமதி, அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தலைவருமான பி.கே.சேகர்பாபுவுக்கு பரிந்துரை செய்தார்.
இதை ஏற்று, மார்க்கெட்டில் உள்ள அனைத்து கழிப்பிடமும் இலவசமாக பயன்படுத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளார். அங்காடி நிர்வாகம் பொறுப்பேற்று கட்டணம் வசூலிக்காமல் கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் உள்ள கழிப்பிடங்களை அங்காடி நிர்வாக அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார். 24 மணி நேரமும் சுழற்சிமுறையில் சுத்தம் செய்யப்படும். திங்கட்கிழமை முதல் வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கழிப்பிடங்களை இலவசமாக பயன்படுத்தலாம் என அங்காடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அங்காடி நிர்வாகம் கூறுகையில், கோயம்பேடு காய்கறி, பூக்கள், பழம் ஆகிய மார்க்கெட் வளாகத்தில் உள்ள கழிப்பிடங்களில் நேற்று முதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் வசூலித்தாலோ, கழிப்பிடங்களை சுத்தம் செய்யவில்லை என்றாலோ அங்காடி நிர்வாக அலுவலகத்தில் வியாபாரிகள் புகார் கொடுக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், மார்க்கெட் வளாகத்தில் உள்ள அனைத்து கழிப்பிடங்களும் திங்கட்கிழமை முதல் இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு நடவடிக்கை எடுத்த அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம் என கூறினர்.