கோவை, அக். 30: கோவை மாவட்டம் பொள்ளாச்சி சல்டானா ரோடு பகுதியை சேர்ந்தவர் தீபக்குமார் (25). இவர், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க தனது பைக்கில் கடந்த 19ம்தேதி வந்தார். தியேட்டரின் பின்புறம் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு, படம் பார்க்க சென்றார். படம் முடிந்து நள்ளிரவில் திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்ைல. திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், சிங்காநல்லூர் அய்யர் லே-அவுட் 12-வது தெருவை சேர்ந்த அபிமன்யு (25), 5-வது தெருவை சேர்ந்த ஸ்ரீஹரி (25), திண்டுக்கல்லை சேர்ந்த ராஜேஷ் (26), அரியலூர் செந்துறை வடக்கு தெருவை சேர்ந்த வசந்தகுமார் (19) ஆகிய 4 பேரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.


