வரும் 26ம் தேதி செம்மொழி பூங்காவை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
கோவை, நவ.15: கோவை விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் ஸ்கை டான்ஸ் எனப்படும் ஒளி, ஒலி லேசர் ஷோ நிகழ்ச்சி நேற்று துவங்கியது. இதன் துவக்க விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை கலெக்டர் பவன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய செந்தில் பாலாஜி கூறியதாவது: அனைத்து துறைகளிலும் ஒரு மாவட்டம் சிறந்து விளங்குகிறது என்றால், அது கோவை மாவட்டம் தான்.
அத்தகைய சான்றோர்கள் உருவாக்கிய மண் கோவை மண். வரும் 26ம் தேதி கோவை மாவட்டத்திற்கு கூடுதல் பெருமை சேர்க்கின்ற வகையில், செம்மொழி பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார். முதல்வரின் எண்ணங்களை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களும் முன்னேற வேண்டும். அதிலும் அவர் கோவைக்கு தனிக்கவனம் செலுத்தி வருகிறார். ஒவ்வொரு முறையும் கோவை அல்லது திருப்பூர் மாவட்டங்களுக்கு வரும்போது எல்லாம் மாவட்ட ஆட்சியரிடம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்து முதல்வர் கேட்டறிவார். இந்த கோவை விழா நம்முடைய விழா குடும்ப விழா. இவ்வாறு அவர் கூறினார்.
