கோவை, நவ. 15: கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) இன்று, நாளை என இரண்டு நாட்கள் நடக்கிறது. அதன்படி, மாவட்டத்தில் டெட் தாள்-1 தேர்வு இன்று (15-ம் தேதி) 15 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வை 3,890 தேர்வர்கள் எழுதுகின்றனர். இதனை தொடர்ந்து டெட் தாள்-2 தேர்வு நாளை (16ம் தேதி) 45 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வில் 12,370 தேர்வர்கள் எழுதுகின்றனர்.
இத்தேர்வு மையங்களில் பள்ளிக்கல்வித்துறை மூலம் 4 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 15 வழித்தட அலுவலர்கள், 60 முதன்மை கண்காணிப்பாளர்கள், 60 துறை அலுவலர்கள், 970 அறைக்கண்காணிப்பாளர்கள், 51 சொல்வதை எழுதுபவர்கள் மற்றும் 120 நிலையான படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தேர்வினை முன்னிட்டு தேர்வு மையங்களுக்கான பாதுகாப்பு வசதி, தூய்மை வசதி, போக்குவரத்து வசதி, அவசர மருத்துவ வசதி, மற்றும் தடையற்ற மின்சார வசதி, ஆகியவற்றை நடைமுறைப்படுத்த மாவட்ட காவல்துறை, மாநகராட்சி, தமிழ்நாடு மின்சார வாரியம், மருத்துவத்துறை, தீயணைப்பு துறை மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
