மேட்டுப்பாளையம், அக்.14: மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் அண்மைக்காலமாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், வாகனங்களில் செல்வோர் மற்றும் பாதசாரிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். நகராட்சி சார்பில் தொடர்ந்து தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முதல் தெரு நாய்களுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் துவங்கியது.
நகராட்சி கமிஷனர் (பொ) வாசுதேவன், சுகாதார அலுவலர் சுரேஷ்குமார், சுகாதார ஆய்வாளர்கள் மகாராஜன், சரவணன், ரவிசங்கர் ஆகியோர் இந்த முகாமை துவக்கி வைத்தனர். தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாம் வரும் அக்.15ம் தேதி வரை தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் அந்தந்த பகுதிகளிலேயே தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.


