கோவை, செப். 11: கோவை மேட்டுப்பாளையம் சாலை எம்.ஜி.ஆர் மார்க்கெட் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகே சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது, அங்கு நின்றிருந்த ஒரு ஆணும் பெண்ணும் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள், கோவை சாய்பாபா காலனி கருணாநிதி நகர், காமராஜர் வீதியைச் சேர்ந்த தினேஷ் (30) மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி (29) என்பது தெரியவந்தது. அவர்கள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


