கோவை, அக். 10: கோவை சூலூர் - சோமனூர் ரயில்வே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த ஆணின் உடலை சோதனை செய்தனர். அதில் அவர் வெள்ளை நிற சட்டையும், அவரது இடது கையில் இரட்டை இலை சின்னமும், எம்ஜிஆர், விபிஎம், விபிவி என்றும் பச்சை குத்தப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போத்தனுர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த ஆண் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


