Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கோவை கிழக்கு புறவழிச்சாலைக்கு ஆதரவு: மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு விவசாயிகள் கண்டனம்

கோவை, ஜூலை 30: கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை ஆதரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் தொழில் அமைப்புகளுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் கிழக்கு புறவழிச்சாலை திட்ட பணிகள் காரணமாக விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக தற்போது கிழக்கு புறவழிச்சாலை திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கிழக்கு புறவழிச்சாலை கோவையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என தொழில் துறையினர் ஒன்றிய, மாநில அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை வலியுறுத்தும், தொழில் அமைப்புகள் மற்றும் அதற்கு ஆதரவு தெரிவித்த எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து கோவை பிரஸ் கிளப்பில், சங்கத்தின் மாநகர மகளிர் அணி செயலாளர் லோகேஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கிழக்கு புறவழிச்சாலை திட்டம் மூலம் சுமார் 1,500 ஏக்கர் விவசாயிகள் நிலங்களை கையகப்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது. ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் 81 கி.மீ நீளத்தில் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் தேவையற்றது. நெடுஞ்சாலைகளை விரிவுப்படுத்தினால் போதுமானது.

இத்திட்டம் தொடர்பாக விவசாயிகள் போராட்டத்தினால் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிட்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், புதிய தமிழ்நாடு அரசு திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்கிறது. இதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. சுமார் ரூ.1,500 கோடி மதிப்பிலான விவசாய நிலங்களை, குறைந்த இழப்பீட்டில் கையகப்படுத்தும் முயற்சியாக இதனை பார்க்கிறோம். இந்த கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கும் கோவை தொழில் அமைப்புகள் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எங்களின் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இத்திட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் செயல்படுத்த கூடாது. மாற்றுத்திட்டங்களை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.