Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கோவையில் டாஸ்மாக் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 6 இடங்களில் சோதனை

கோவை, ஜூலை 30: டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானக் கொள்முதல், விநியோகம் மற்றும் லைசென்ஸ் நடைமுறைகளில் பல கோடி ரூபாய் நிதி முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று அதிகாலை முதல் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. கூடுதல் எஸ்பி ராஜேஷ் தலைமையிலான போலீசார் கோவை மாநகர பகுதி டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை விநியோகிக்கும் முதன்மை மையமாக செயல்படும் பீளமேடு டாஸ்மாக் கிடங்கில் சோதனை மேற்கொண்டனர்.

அங்குள்ள இருப்புக் கோப்புகள், விற்பனை கணக்குகள் மற்றும் காகித ஆவணங்கள் அனைத்தும் கணினியில் உள்ள தரவுகளோடு ஒப்பிட்டுப் ஆய்வு செய்தனர். தொடர்ந்து திருச்சி ரோடு ராமநாதபுரம் மதுபான ஆலை, ரத்தினபுரி விஸ்வநாதபுரம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். அதேபோல், பொள்ளாச்சி டாஸ்மாக் கிடங்கிலும் சோதனையில் ஈடுபட்டனர். வழக்கத்தை விடக் கூடுதல் பெட்டிகள் அனுப்பப்பட்டதா? கணக்கில் வராத மதுபானப் பெட்டிகள் உள்ளனவா? என்பது குறித்து மேலாளர்கள் மற்றும் கிடங்கு ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் டாஸ்மாக் கிடங்கிலும், கேரள எல்லைக்கு அருகில் அமைந்துள்ள நவக்கரை டாஸ்மாக் கிடங்கிலும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லாதவாறு, போலீஸ் பாதுகாப்புடன் சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், டிஜிட்டல் சான்றுகள் தொடர்பான போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.