Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

குறைதீர் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள்

கோவை, ஜூலை 30: கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் மாருதி பிரியா தலைமை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் பங்கேற்றனர். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கோட்டாட்சியரிடம், ஒண்டிப்புதூரில் பல லட்சம் ரூபாய் செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து காடுகுட்டை பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்த தண்ணீரை சுல்தான்பேட்டை வரை தனியார் நிறுவனங்கள் கொண்டு செல்கின்றார்கள். ஆனால், விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. செட்டிபாளையம், கள்ளப்பாளையம், ஓராட்டுக்குப்பை, ஏகாணி, குரும்பபாளையம், மயிலம்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இது தொடர்பாக நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து தொண்டாமுத்தூர் பகுதியில் விவசாயிகள் நிலங்கள் வழியாக மின்சார டவர் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவாணி தண்ணீர் பூண்டியில் உள்ள ஈஸ்வரன் கோயிலுக்கு கிடைப்பதில்லை.

எனவே, கோயிலுக்கு சிறுவாணி நீர் வழங்க வேண்டும். தனியார் விவசாய நிலங்களில் உள்ள டெல்லி முள் செடிகளை அகற்ற வேண்டும். காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு புகார்களை முன்வைத்தனர். அப்போது ஆர்டிஓ மாருதி பிரியா வனத்துறை அலுவலர்களை அழைத்தார். கூட்டத்தில், வனத்துறை அலுவலர் பங்கேற்கவில்லை என்பதால் அவர்கள் அங்கு இல்லை. இதே போல், கனிமவளத்துறை, தாசில்தார், வேளாண் துறை உள்ளிட்ட அதிகாரிகளும் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரியவந்தது. இதையடுத்து, கூட்டத்திற்கு துறை சார்ந்த அதிகாரிகள் கட்டாயம் வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது, கோட்டாட்சியர், விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் எனவும், அடுத்த கூட்டத்திற்கு அனைவரும் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, விவசாயிகள் தொடர்ந்து தங்களின் கோரிக்கைளை முன்வைத்தனர். இக்கூட்டத்தில் பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்காத காரணத்தினால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.