Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

குப்பை கொட்ட வந்த முதியவரிடம் செல்போன் பறிப்பு

கோவை, ஜூன் 30: முகவரி கேட்பது போல் நடித்து குப்பை கொட்ட வந்த முதியவரிடம் செல்போன் பறித்த வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை கவுண்டம்பாளையம் அடுத்த நல்லாம்பாளையம் ஜெய் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனாட் (63). இவர், கடந்த 24ம் தேதி இரவு தனது வீட்டின் அருகே குப்பை கொட்டுவதற்காக வெளியே வந்தார். அப்போது, அந்த வழியாக பைக்கில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் பெனாட் அருகே பைக்கை நிறுத்தி, “கணபதி பகுதிக்குச் செல்ல எப்படிப் போக வேண்டும்?” என்று கேட்டுள்ளனர். அதற்கு முதியவர் பெனாட் வழி சொல்லிக் கொண்டிருந்தார். அவர் பேசிக் கொண்டிருந்த போது, பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர், பெனாட் கையில் வைத்திருந்த செல்போனை பறித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

ஆனால், அதற்குள் அந்த மூன்று பேரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து பெனாட் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வந்தனர். இதற்கிடையே போலீசார் தயிர் இட்டேரி பகுதியில் உள்ள காலி இடத்தில் ரோந்து சென்று கண்காணித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் 3 கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், விசாரணையில் அவர்கள் பெனாட்டிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரத்தினபுரி மாதவன் வீதியை சேர்ந்த கிஷோர் (22), ரத்தினபுரி நாராயணசாமி நகரைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் (21) ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய சங்கனூர் மெயின் ரோடு தெய்வநாயகி வீதியை சேர்ந்த சுபாஷ் (24) என்பவரை தேடி வருகின்றனர்.