பொள்ளாச்சி, செப்.26: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து, நீர் மட்டம் மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த மொத்தம் 120அடி கொண்ட ஆழியார் அணைக்கு, பரம்பிக்குளத்தில் தண்ணீர் திறக்கும்போது கான்டூர் கால்வாய் மற்றும், காடாம்பாறை, அப்பர் ஆழியார் அணை வழியாகவும். மழை இருக்கும்போது மேற்கு தொடர்ச்சி மலைமுகடுகளில் இருந்தும் தண்ணீர் வரத்து இருக்கும்.
இந்த அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாய பகுதிக்கு குறிப்பிட்ட நாட்கள் தண்ணீர் திறக்கப்படுகிறது. அதுபோல கேரளாவுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏழே கால் டிஎம்சி தண்ணீர் அவ்வப்போது திறக்கப்படுகிறது. மேலும், ஆழியாறில் திறந்துவிடப்படும் துண்ணீர் பொள்ளாச்சி, குறிச்சி, குனியமுத்தூர் நகராட்சிகள் மற்றும் வழியோர கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. மொத்தம் 120அடி கொண்ட ஆழியார் அணையில், சுமார் 3 ஆயிரத்து 864 மில்லியன் கன அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

