பொள்ளாச்சி, செப்.26: பொள்ளாச்சி உடுமலை ரோட்டில், இரவு நேரத்தில் லாரியில் இருந்து விழுந்த மின் கம்பத்தால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் பகல் மற்றும் இரவு என தொடர்ந்து வாகன போக்குவரத்து உள்ளது. இதில் இரவு முதல் அதிகாலை வரை அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களின் போக்குவரத்து பெருமளவு உள்ளது. இதில் பொள்ளாச்சியில் இருந்து உடுமலை நோக்கி சென்ற லாரியானது, இரவு நேரத்தில் தேர்நிலைப் பகுதியில் வரும்போது, அதிலிருந்த மின் கம்பம் ஒன்று நடுரோட்டில் விழுந்தது. அந்த மின்கம்பம் விழுந்ததை கூட அறியாமல் லாரி அங்கிருந்து விரைந்து சென்றது.
சுமார் 9 மீட்டர் நீளமுள்ள மின்கம்பம் சாலையில் விழுந்ததால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல அச்சமடைந்தனர். இரவு நேரம் முழுவதும் நடுரோட்டில் விழுந்து கிடந்த அந்த கம்பம் அப்புறப்படுத்தாமல் கிடப்பில் கிடந்தது. இதனால் பகுதியில், அவ்வப்போது போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று காலையில், நகர் மன்ற உறுப்பினர் சாந்தலிங்கம் மற்றும் பொதுமக்கள் சிலர், அந்தக் கம்பம் விழுந்த பகுதியில் டிவைடர்கள் வைத்து மறைத்தனர். பின் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


