பொள்ளாச்சி, செப்.26: பொள்ளாச்சி நகராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நகராட்சி சுகாதாரத்துறையினர் நேற்று பல்வேறு பகுதிகளில் கொசுப்புழு ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். இதில், புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தில் உள்ள தரைத் தொட்டியில் தண்ணீர் தேங்கி, அதில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியானது கண்டறியப்பட்டது. கட்டுமான பகுதியில் தண்ணீர் தேங்காமல் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் வளாகத்தை பராமரித்ததற்காக, சம்பந்தப்பட்ட கட்டுமானப் பொறுப்பாளருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கியிருப்பது பொது சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காரணத்தால், கொசுப்புழு உற்பத்தி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. கட்டுமான பகுதிகளில் உள்ள தரைத்தொட்டிகள், மேல்நிலைத்தொட்டிகள், கட்டுமான பொருட்கள் மற்றும் பிற கொள்கலன்களில் தண்ணீர் தேங்காதவாறு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கட்டுமான உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


