Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெண்களுக்கான இலவச பயணத் திட்டத்தில் சாதாரண கட்டண பஸ்களில் மட்டும் அனுமதி

கோவை,ஆக.26: தமிழ்நாட்டில் அக்டோபர் 2-ம் தேதி முதல் துவங்கப்படும் பெண்களுக்கான இலவச பேருந்து வெற்றி பயணம் திட்டத்தில்,சாதாரண கட்டண பஸ்களில் மட்டுமே பெண்கள் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். தமிழ்நாட்டில் பெண்களுக்கு போக்குவரத்து வசதியை எளிமையாக்கவும், பொருளாதாரத்தை உயர்த்தவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன்படி, மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அரசு விரிவுபடுத்த இருப்பதாக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, மாநகரம், நகர பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ்,எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும், மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ளும் வகையில், புறநகர் (மப்சல் பஸ்), மலைப்பகுதிகளில், சாதாரண கட்டண பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த வெற்றி பயணம் திட்டம் வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், எந்த வகை பஸ்களில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம், எந்த வகையான பஸ்களில் பயணிக்க அனுமதி இல்லை உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து போக்குவரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநகரம் மற்றும் நகரப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகள்,சொகுசுப் பேருந்துகள் (டீலக்ஸ்), குறித்த நிறுத்த சேவை பேருந்துகள் (எல்எஸ்எஸ்) ஆகியவற்றில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இதுவரை பெண்களுக்கு இலவச பயண சலுகை வழங்கப்படாத சில உள்ளூர் மற்றும் வெளியூர் சேவைகளிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. குறிப்பாக, புறநகர் சாதாரண கட்டண பேருந்துகள் இனி பெண்களுக்கு இலவச பயணத்திற்கு அனுமதிக்கப்படும். எனவே, பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு முன்பு அது எந்த வகையான சேவை என்பதை கவனிக்க வேண்டும்.

சாதாரண கட்டணப் பேருந்துகளின் முன்பக்க கண்ணாடி அல்லது மின் பலகையில் பொதுவாக “ஓஆர்டி”, “ஆடினரி” அல்லது “சாதாரண கட்டணம்” என குறிப்பிடப்பட்டிருக்கும். இத்தகைய பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். அரசு ஏசி பேருந்துகள், மப்சல் 2+2 அலட்ரா டீலக்ஸ், புறநகர் 2+2 சொகுசு பேருந்து, மப்சல் எக்ஸ்பிரஸ் பேருந்து, புறநகர் விரைவு பேருந்து,மப்சல் டீலக்ஸ், புறநகர் சொகுசு பேருந்து உள்ளிட்ட பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயண அனுமதி இல்லை. எனவே, பேருந்தின் பெயர் அல்லது நிறத்தை மட்டும் வைத்து இலவச பயணம் என முடிவு செய்யாமல், அதன் சேவை வகையை முன்பக்க மின் பலகை அல்லது கண்ணாடியில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக, சாதாரண கட்டணம் என குறிப்பிடப்பட்டிருந்தால், பெண்கள் அந்த பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம். ஆனால் எக்னாமிக் ஏசி, இஏசி,பைபாஸ் ரைடர், என்ட் டூ என்ட், பீரிமியம் சர்வீஸ், பாஸ்ட் பாசஞ்சர் உள்ளிட்ட தொலைதூர சேவைகள் என்றால் இலவச பயண சலுகை பொருந்தாது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.