கோவை, ஆக. 28: கோவையில் மூன்று இடங்களில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் ஸ்டேஷன்கள் திறக்கப்பட்டது. இங்கு 75 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போதை பொருள் தடுப்பு பிரிவு புதியதாக தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக, கோவை மாநகரில் வடக்கு மற்றும் தெற்கு சரகத்திலும், மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டில் ஒரு குழுவும் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு எஸ்ஐ. தலைமையில் 5 போலீசார் போதை பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், போதை பொருள் தடுப்பு பிரிவை விரிவாக்கம் செய்து போலீஸ் ஸ்டேஷன்கள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகரில் வடக்கு சரகத்திற்கு ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு பகுதியும், தெற்கு சரகத்திற்கு ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் காலியாக உள்ள மகளிர் போலீஸ் ஸ்டேஷனும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்ட போலீசாருக்கு போத்தனூரில் செயல்பட்டு வந்த பேரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை, நேற்று திறக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தது.
இங்கு தலா ஒரு இன்ஸ்பெக்டர், 4 எஸ்ஐ.,க்கள், 20 போலீசார் என மொத்தம் 3 போலீஸ் ஸ்டேஷனுக்கு 75 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இவர்களுக்கு தனி வாகனம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் கஞ்சா, போதை மாத்திரை போன்ற அனைத்து போதை பொருட்களின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து, அவற்றை விற்பவர்களை பிடித்து, போதை பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட உள்ளனர். அதேபோல் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் போதை பொருட்களை பறிமுதல் செய்யும் எல்லையில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.



